Wednesday, July 28, 2010

நாச்சாரம் வீடு.

மூண்டு நாளா ஒரே அடை மழை.இது நாலாம் நாள்.ஈரலித்த காற்றோடு பொழுது விடிகிறது.ஆனால் வானம் வெளித்தாலும் மழையின் அறிகுறியும் கலந்தே.சூரிய வெளிச்சம் வந்தும் சூடாயில்லை பூமி.வளவு முழுக்க மரங்கள் முறிந்த கொப்பும் கிளையும் பழுத்தலும் பச்சையுமாய் ஒரே குப்பை.வேலிகள்கூட பாறி விழுந்துகிடக்கு.வீடு கட்டும் வேலை வேற நடந்துகொண்டிருக்கு.அதனால குழியும் குண்டுமாய்க் கிடக்கு.ஒரு பக்கம் மணலும்,சல்லிக் கல்லும் குவிச்சபடி.இன்னும் சொட்டுச் சொட்டாய் சொட்டும் நீர்த்துளிகள் சொட்டிக் கோடு கிழித்து ஓடி அந்தப் பள்ளங்களை நிரவிக்கொண்டிருந்தது.

தெருவில் 2-3 நாளைக்குப் பிறகு மனிதத் தலைகள் தெரிகின்றன்.திரும்பவும் மழை வரலாம் என்பதால் வேலுப்பிள்ளை அண்ணை கடை வாசலில சனம்.பறவைகளும் உடல் சிலுப்பிச் சந்தோஷச் சத்தம் போட்டபடி குஞ்சுகளுக்கு இரை ஊட்டிக்கொண்டிருந்தது.

பிரிந்து கிடந்த மேகங்கள் ஒன்று சேர்ந்துகொண்டிருந்தாலும் வானின் ஒரு மூலையின் அடுத்த அடை மழைக்கான ஆயத்தங்கள் நடந்துகொண்டிருந்தன.அவகாசங்களை அத்தனை உயிரினங்களும் பயன்படுத்திக்கொண்டிருந்தன.அப்படி ஒரு அடை மழை மழை தந்த ஆர்ப்பாட்டத்தை அந்தரத்துச் சூரியன் ரசித்தபடியே சின்னதாய்ச் சிரித்துக்கொண்டிருந்தான்.

ராகுல் வாசலில் ஈரலிப்பாய் இருக்க,நிலம் படாமல் குந்தியபடி வளவை நோட்டமிட்டுக்கொண்டிருந்தான்.

"ச்ச....இப்பிடியொரு மழை.வந்தா மனுசரை இப்பிடி நாறடிக்கும்.இல்லாட்டிக் காயவைக்கும்.உலகத்தில் ஒண்டும் ஒழுங்கில்ல.இந்த மழைக்குள்ள எப்பிடி மேசனும் மரவேலை செய்றவையளும் வருவினம்.போக வரக்கூட முடியாம மரங்கள் வேற முறிஞ்சுகிடக்கு.நான்தான் கொஞ்சம் ஒதுக்கிவிடவேணும்."

இது அம்மான்ர நாச்சாரம் வீடு.அம்மா எனக்குத்தான் தந்தவ.அண்ணா அம்மான்ர சொல்லுக் கேக்காம தன்ர எண்ணத்துக்குக் கல்யாணம் செய்துகொண்டு போய்ட்டான்.அப்பா நாங்கள் சின்னனாய் இருக்கேக்கையே மாரடைப்பு வந்து எங்களை விட்டுப் போய்ட்டார்.அம்மாதான் கஸ்டப்பட்டு எங்களை வளர்த்தவ.

அம்மான்ர சீதன வீடு இது.தாத்தாதானாம் சின்னச் சின்னதா சேமிச்சு அம்மம்மான்ர ஆசைப்படி நிறையக் கஸ்டத்தோட கட்டின வீடாம்.அம்மா அடிக்கடி "இது வீடில்லை ராசா.தாத்தா அம்மம்மான்ர கோயில்" எண்டு சொல்லுவா.அவையளும் இந்த வீட்ல இருந்துதான் செத்துப்போனவை.

"அம்மாவுக்குக் கொஞ்சமும் பிடிக்கேல்ல வீட்டை இடிச்சு இப்பத்தைய நாகரீகத்தோட கட்டுறது."

"ஏனப்பு இப்பிடியே வச்சுக்கொண்டு முன்னுக்கு நீ விரும்புற மாதிரிக் கட்டன்.நானும் இதுக்குள்ள கிடந்துதான் சாகவேணும்."

இஞ்சாலப் பக்கம் ஜானுவோ "என்னப்பா மழை வந்தா நாலு அறையும் நனைஞ்சு போகுது.பிள்ளைகளை எந்த நேரமும் கவனிச்சுக்கொண்டு இருக்கேலாது.நான் குசினிக்குள்ள இருக்க அவங்கள் மழைக்குள்ள கூத்தடிக்கிறாங்கள்."

முதல் அம்மா சொன்னபடி முன் பக்கத்திலிருந்து இணைச்சு அழகாக்க நினைச்ச ராகுல்,பிறகு ஏனோ மனம் மாறி இடித்துக் கட்டவே முடிவெடுத்துவிட்டான்.அம்மாவைச் சமாதானப்படுத்தியும் விட்டான்.பாவம் சீதாம்மா.வேறு வழி என்ன அவவுக்கு ?

ஜானு அடுப்பங்கரையில் அலுவலாய் இருந்தாள்.பிள்ளைகள் கணணியில் ஏதோ விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.அவர்களுக்கு ஒரு மாத பாடசாலை விடுமுறை.அதனால் நானும் இரண்டு மாத விடுமுறை எடுத்துக்கொண்டு துபாயிலிருந்து வந்திருக்கிறேன்.மழை படுத்துற பாட்டைப் பார்த்தால் வீட்டு வேலையை முடிச்சிட்டுப் போகேலாது போல இருக்கு.

ஜானுவுக்கு காஸ் அடுப்பு வாங்கிக் குடுக்காட்டி என்னத் திண்டு கை கழுவியிருப்பாள். கறண்டும் மழையால நிண்டு நிண்டு வருது.ரெண்டு பிள்ளைகள்,எப்பவும் முனகினபடியே படுத்திருக்கிற அம்மா இதுக்குள்ள பெரிய வளவு வீடு எல்லாத்தையும் எப்பிடித்தான் அவள் கவனிப்பாள்.தொலைபேசியில சொல்லேக்கை நானும் திட்டுவன்.

"பிள்ளைகள் வளர்ந்திட்டினம்.அவையளின்ர வேலைகளை அவையளே செய்யினம்.அம்மாவும் தன் வேலைகளைப் பார்த்துக்கொள்றா.நீ என்ன வெட்டி விழுத்துறாய்" எண்டு.இங்கயிருந்து பார்க்கத் தெரியுது.கொஞ்சம் கஸ்டம்தான்.பாவம்தான் ஜானு.

"அம்மா பசிக்குது" என்று மகனின் குரல் கேக்குது.

"அப்பா எங்கயடா"

"அவர் கேற்றடியில குப்பை அள்ளிக்கொண்டு நிக்கிறார்."

அம்மாவின் குரலும் "பிள்ளை...தம்பி" எண்டு கூப்பிட்டுக் கேக்குது.

ஒற்றை அறையை இப்போதைக்கு வச்சுக்கொண்டு நான் ஜானு பிள்ளைகள் அதுக்குள்ளதான் சமாளிக்கிறம்.அம்மாவை மாட்டுக் கொட்டிலுக்குள்ளதான் கட்டில் போட்டுக் கொடுத்திருக்கு.வீட்டு வேலை முடியிற வரைக்கும்தானே.அம்மா அழ அழ பசுமாட்டையும் ஆட்டுக்குட்டியையும் வித்திட்டன்.நல்ல வேளை இந்த மழைக்குள்ள அதுகளும் நிண்டிருந்தா ஜானுபாடு எவ்வளவு கஸ்டம்.சீதாம்மா கனவில் அந்தப் பசுவும்,அவவின் ஐயாவும் அடிக்கடி வந்து போயினமாம்.அம்மா என்னைக் காணேக்கையெல்லாம் புலம்புறா.

"உங்களுக்கும் ஏலாமப் போச்சு.எப்பிடியம்மா இனி மாடும் ஆடும்..."சமாதானம் சொல்லி முடித்தான் ராகுல்.

பக்கத்து வீட்டு அம்மாச்சி அம்மாவை விசாரிக்கிறா.
"எப்பிடித் தம்பி அம்மா இருக்கிறா.இந்தச் சனியன் பிடிச்ச மழையால வந்து பாக்கவும் முடியேல்ல.பக்குவமாப் பாத்துக்கொள் தம்பி.பாவமது.கொப்பரும் செத்துப்போக உங்களோடயே அதின்ர காலமும் போய்ட்டுது.இனியாலும் அது சந்தோஷமாச் சாகவேணும்.என்னட்ட எல்லாம் சொல்லும்.சொல்லு வாறனாம் எண்டு" என்றபடி ஏதோ சொல்லியபடியே போய்க்கொண்டிருந்தா.

"அப்பா.....அம்மா சாப்பிட வரட்டாம்"

"சரி சரி வாறன்.போடச்சொல்லு இப்ப வந்திடுறன்."என்றபடி கை கால் அலம்பிக்கொண்டு சாப்பிட உடகார்ந்தான் ராகுல்.

"என்னப்பா நான் ஒரு விஷயம் சொன்னனான் யோசிச்சீங்களோ" எண்டபடி ஜானு சாப்பாடு போட்டுக்கொண்டிருந்தாள்.

"ஓமப்பா யோச்சிருக்கிறன்.திடீரென்று ...பாப்பம் செய்யலாம்.இப்ப சாப்பாடு தாரும்."என்று வாங்கிச் சாப்பிடத் தொடங்கினான்.

"உங்க...உவரைப் பாருங்கோ.நாங்களே இருக்க இடமில்லாம சமைக்கிறது எங்க சாப்பிடுறது எங்க படுக்கிறது எண்டு தெரியாமல் திண்டாடுறம்.இவரும் வீட்டுக்குள்ள படுக்க வேணுமாம்.அடி...வெளில போ பிறகு சாப்பாடு வைக்கிறன்.அம்மான்ர கட்டிலுக்குக் கீழ ஒரு சாக்குப் போட்டிருக்கிறன்.அது குளிருதாமெல்லோ மாப்பிள்ளைக்கு"

என்று திட்டிக்கொண்டே நாயை வெளியில் துரத்த அது பின் பக்கமாய் ஓடின ஓட்டத்திலே பலமாகக் குரைக்கத்தொடங்கியது.

"ஏனப்பா அடிச்சனியே.பாவம் ஏன் இப்பிடிக் குரைக்குது" என்றபடி பின் பக்கம் போன ராகுல்

"அம்மா....அம்மா ஏனம்மா இங்க வந்தனீங்கள்.எங்களைக் கூப்பிட வேணாமே" சேற்றில் விழுந்துவிட்ட சீதாம்மா எழும்ப முயற்சித்துகொண்டிருந்தா.

"இல்லையப்பு கூப்பிட்டனான்.உங்களுக்குக் கேக்கேல்லையோ என்னவோ.சரி நானே வருவமெண்டுதான் வந்தன்.அந்தச் சருகுக்குள்ள தடி தண்டுகள் கிடந்து தடக்குப் பட்டு விழுந்திட்டன்.எழும்புவமெண்டா வழுக்கி விழுறன்."

"எங்கையெண்டாலும் அடிபட்டுப்போச்சோ"

"இல்லை இல்லை எனக்கு ஒண்டும் ஆகேல்ல.நோகேல்ல.என்னை ஒருக்கா பிடிச்சுக்கொண்டுபோய் விடு.என்ர உடுப்புகளை மட்டும் எடுத்துத் தந்துபோட்டுப் போ."

"சரி உடுப்புகளை மாத்துங்கோ.சாப்பாடு எடுத்துக்கொண்டு வாறன்" என்றபடி பிடித்துக்கொண்டு வந்து விட்டு கொடியில் கிடந்த உடுப்புகளை எடுத்துக் கொடுத்துப் போனான் ராகுல்.

பொழுது நகர்ந்துகொண்டிருந்தது.மழையும் பெய்துகொண்டிருந்தது.இரவாக மின்சாரம் தடைப்பட....

"எங்க நெருப்புப் பெட்டி"

"அண்ணா இங்க இரடா பயமாக்கிடக்கு."

"பிள்ளை எனக்கும் மெழுகுதிரி கொண்டு வா பிள்ளை.அப்பிடியே நுளம்புத் திரி இருந்தாலும் கொண்டு வா.நுளம்புக் கடி தாங்கேலாமக் கிடக்கு" எண்டு சீதாம்மாவின் குரலும்.

இருட்டுக்குள் கைத்தொலைபேசியும் அலற ராகுல் பேசத்தொடங்க மேசன் தான் சொன்னார்."எப்பிடியும் 10 நாட்களாவது வேலை செய்யமுடியாதாம்.ஓடர் பண்ணின சீமெந்து வரேல்லையாம்."

ராகுலுக்கு எரிச்சல் எரிச்சலாய் வந்தது மழைக்கு மேல.
குளிரும் காற்றும் நுளம்பும் பூச்சிகளுமாய் இருள் விடியத் தொடங்கியது.

ராகுலுக்கு ஜானு சொன்ன யோசனை நல்லதாகவே பட்டது.

"இஞ்சப்பா மழை கொஞ்சம் விட்டிருக்கு.இந்த இடைக்குள்ள பிள்ளைகள் ரெண்டு பேரையும் கூட்டிக்கொண்டுபோய் தலை மயிரையும் வெட்டிக்கொண்டு,வரேக்க மீனும் மரக்கறிகளும் வாங்கிக் கொண்டு வாறியளே.நாளைக்கு மழை கொஞ்சம் குறையேக்க நிறைய வேலைகள் கிடக்கு.மேசன் வராட்டிலும் நாங்க செய்ய வேண்டியதுகளைச் செய்து வைக்கலாம்."

"சரி நான் கூட்டிக்கொண்டு போய்ட்டு வாறன்.அம்மாவையும் கூட்டிப்போகவேணும்.ராஜன் ஆட்டோ கூப்பிட்டால் உடன வருமோ?"

"ஓம் ஓம் வருவார்.நான் சொல்லி வைக்கிறன்...ஒரு மூன்று மணி போல வரச்சொல்லி."

"சரி...சரி கறிவேப்பிலை கொப்பும் முறிஞ்சுகிடக்கு.அம்மாவுக்குப் பிடிச்ச நல்ல துவையலும்,தக்காளிப்பழச் சொதியும்,சின்னமீனும் பொரிச்சுவிடும் போதும் இண்டைக்கு. நான் வாறன்" என்றபடி பிள்ளைகளோடு வெளியே போனான் ராகுல்.

சீதாம்மாவிடமும் போய்ச் சொன்னான்
"அம்மா வெளிக்கிட்டு நில்லுங்கோ.நான் வந்தவுடன சாப்பிட்டிட்டு டொக்டரிட்ட போய்ட்டு வருவம்."

"ஏனப்பு எனக்கென்ன.நல்லாத்தானே இருக்கிறன்.வேலை வெட்டி செய்யேலாது. விழுந்தெழும்புறன் எண்டா அது எனக்கு வயசு போய்ட்டுது.
இதுக்கு டொக்டரிட்ட போய்க்காட்டி ஒண்டும் செய்யேலாது."

"இல்லையம்மா நேற்றும் விழுந்து போனியள்.சாப்பிட்டிட்டு போய்ட்டு வருவம்." ஒன்றும் சொல்லாமல் பேசாமல் இருந்தாள் சீதாம்மா.

ராகுல் வர,எல்லோருமாகச் சாப்பிட்டும் முடிய ஆட்டோவும் வந்தது.ராகுலும் சீதாம்மாவும் புறப்பட சீதாம்மாவின் நாய் சீதாம்மாவை தடவிச் சுற்றிப் போனது.

போகும் வழியில் "ஏனப்பு...எங்கட டொக்டரிட்ட போகாம எங்க போற ?"

"இது வேற டொக்டரம்மா.ஜானு இங்க கதைச்சு வச்சிருக்கிறாள்.காசும் கட்டியிருக்கு.எனக்கும் இங்க நல்லதெண்டு படுது அதுதான்" என்றான்.

கதைத்துக்கொண்டிருக்க ஓடிக்கொண்டிருந்த ஆட்டோவை ஆட்டோ ராஜனிடம் "இதிலதான் அண்ணை நிப்பாட்டுங்கோ.நிண்டுகொள்ளுங்கோ நான் வந்திடுவன்."

"இதிலையோ அண்ணை !"எண்டு கேள்விக்குறியோடு பார்த்த ராஜன் நிப்பாட்டினார்.

இறங்கி நடந்தனர் சீதாம்மாவும் ராகுலும்.இவர்களைக் கண்டதுமே முதலே அறிவித்தல் கொடுத்ததுபோல ஒரு தாதி வந்து மிகவும் அன்போடு அணைத்துக் கூட்டிப்போனார்.

தாதியோடு வரவேற்பறையில் இருந்திவிட்டு டாக்டருடன் கதைத்து வருவதாகப் போனான் ராகுல்.சீதாம்மா சுற்றும்முற்றுமாய் பார்த்துக்கொண்டிருந்தார்.அழகாகப் பூமரங்களும் புற்தரைகளுமாய் அழகாக இருந்தது சுற்றாடல்.சில வயதானவர்கள் அங்குள்ள கதிரைகளில் காற்றாட இருந்தார்கள்.

ராகுலும் டாக்டரும் வந்தார்கள்."அம்மா இப்போதைக்கு நீங்கள் இங்கதானாம் இருக்க வேணும்.அங்க வீட்லயும் குளிரும் நுளம்புமாய் அவஸ்தைதானே.வீடும் கட்டி முடிய நீங்களும் வரலாம்."சீதாம்மாவின் வாயில் எதுவும் வரவில்லை.மனம் மட்டும் ஏதோ உளறிக் கொண்டிருந்தது.சொன்னாலும் இப்போ கேட்கும் மனநிலையிலும் ராகுல் இல்லை.

சீதாம்மாவைக் கூட்டிப்போனார்கள் நான்கு பேர் இருக்கும் ஒரு அறையொன்றைக் காட்டி."இனி இதுதான் அம்மா உங்கட இருப்பிடம்.உங்கட வயசை ஒத்தவையளும் இருக்கினம்.பொழுதும் போகும்.நாங்களும் அடிக்கடி வந்து பாத்திட்டுப் போவம்தானே.என்ன ஒரு மாசம்தானே."என்றபடி ராகுல் நாளை வருவதாகச் சொல்லி டாக்டருடன் கதைத்தபடியே போய்க்கொண்டிருந்தான்.

மழை திரும்பவும் அடித்துக் கொட்டத் தொடங்கியது.சீதாம்மாவின் மனமும் இடியும் மின்னலும் புயலுமாய் நனைந்துகொண்டிருந்தது.

அடுத்த நாள் உடுப்புகளோடும் ஜானு பிள்ளைகளோடும் வந்து பார்த்துப் போனார்கள்.இரண்டு மூன்று நாளுக்கொருமுறை வந்து போனார்கள்.ஒரு வாரத்தின் பின் தான் சீதாம்மாவுக்குச் சரியாக உணர முடிந்தது அது ஒரு வயோதிபர் மடம் என்று.

இரண்டு நாள்... மூன்று நாள் ...என்று ஒரு வாரமென்று...இப்போ குறைந்தே விட்டது.

இரு வாரத்தின் பின் எல்லோரும் வந்தார்கள்.சீதாம்மா
அழத்தொடங்கிவிட்டா. தான் வரப்போகிறேன் வீட்டுக்கு என்று.பிள்ளைகள் கூட்டிப்போகலாம் என்றார்கள்.இல்லை வீடு சரியாகத் திருத்தப்படட்டும் என்று தவிர்த்துப் போனார்கள்.

பின்னொருநாள் வீடு மழை காரணமாகத் திருத்தப்படவில்லையென்றும் சீதாம்மாவை இங்கேயே இருக்கும்படியும் அடுத்தமுறை தான் வந்து கூட்டிப்போவதாகவும் ஒரு தொலைபேசியில் செய்தி சொல்லிவிட்டு அணைத்துவிட்டான் அன்னை உறவை ராகுல்.

சீதாம்மா இன்னும் நம்பிக்கையோடு காத்திருக்கிறா அந்த வயோதிபர் மட வாசலில் குந்தியபடி.யாரும் வருடம் கழிந்தும் வந்தபாடில்லை.ஆனால் சாப்பாடும்,படுக்கைக்கும் பணம் வந்துகொண்டிருப்பதாகச் சொல்லி அவரைக் கவனித்துக்கொண்டிருந்தார்கள்.

எப்போவாவது ஜானு குழந்தைகள் வந்து பார்த்துப் போனார்கள்.ராகுலும்
3 - 4 மாதத்திற்கொருமுறை தொலைபேசியில் கடமைபோலப் பேசுவான் ஏதாவது.

ஆனால் நாச்சாரம் வீடு பற்றி மட்டும் ஒன்றுமே சொல்லமாட்டான்.
சீதாம்மாவின் மனமோ நாச்சாரம் வீட்டுக்குள்ளேயே அலைந்தது.வீடு முழுதுமாய் இடிக்கப்பட்டதும்,கராஜ் கட்டுவதற்காகத் தாத்தா வைத்த தென்னை மரம்கூட உயிர் விட்டதும் சீதாம்மாவுக்குத் தெரியாமலே போனது.

அதே அடை மழை இன்றும் இன்னும் பெய்துகொண்டிருக்க்கிறது.
சீதாம்மாவின் மனதிலும் கண்களிலும்.

ஹேமா(சுவிஸ்)

Thursday, July 22, 2010

கேள்விகளும் அர்த்தங்களும்.

அட கடவுளே ! இப்படியுமா அர்த்தங்கள்
இருக்க முடியும் ?இத்தனை வயசு
வரைக்கும் தெரிஞ்சிக்கமலே பாழ் பண்ணிட்டேனே!
ஹும்!!! இனிமே புலம்பி என்னா பண்ணறது?

“ஆழ்கடல்ல இருக்கிறதைக்கூட கண்டு பிடிச்சுடலாம்.ஆனா ஒரு பெண்ணோட மனசுல இருக்கிறதை கண்டே பிடிக்க முடியாது”ன்னு சொல்லுவாங்க.அது ஓரளவுக்கு உண்மைதாங்க.அவங்க என்ன நினைக்குறாங்களோ அதைச் சூசகமா வார்த்தைகள்'ல வெளிப்படுத்துவாங்க.ஆனா நம்மளாலதான் அதை புரிஞ்சுக்க முடியறது இல்லை. உதாரணத்துக்கு அவங்க சூசகமா சொல்லக்கூடியா வார்த்தைகளையும் அதுக்குப் பின்னணியில இருக்கிற “உண்மையான”அர்த்தத்தையும் இப்போ நாம பார்க்கலாம்.

1)உங்களுக்கு என்ன பிடிக்கும்?

இந்தக் கேள்வியை அவங்க கேட்டாங்கன்னா உடனே நாம வரிஞ்சுகட்டிக்கிட்டு நமக்கு பிடிச்சதை எல்லாம் ஒப்பிப்போம்.ஆனா இந்தக்கேள்விக்குப் பின்னாடி இருக்கிற அர்த்தம் என்ன தெரியுமா?

உனக்கு பிடிக்கிற விஷயத்தை எல்லாம் என்னால ஃபாலோ பண்ண முடியாது !

2)அந்தப் பொண்ணு எவ்ளோ அழகா புடவை கட்டி இருக்கா இல்ல ?

அப்படின்னு எதாவது ஒரு விளம்பரத்தை பார்த்திட்டு சொன்னா உடனே நாம் அந்த பொண்ணோட அழகைப்பத்திதான் யோசிப்போம்.ஆனா அவங்க நம்மகிட்ட சொல்லவர்றது என்னன்னா

அந்த கடைக்கு கூட்டிட்டு போய் அதே மாதிரி புடவையை எனக்கும் வாங்கிக்குடுடா !

3)இண்ணைக்கு என்ன சமையல் பண்ணட்டும் ?

இந்தக் கேள்வியைக் கேட்டுட்டா அடடா நமம பொண்டாட்டி நம்மகிட்ட கேட்டுகிட்டுத்தான் சமையலே செய்யுறாளே அப்படின்னு நீங்க புளங்காகிதம் அடையக்கூடாது.

டேய்! இன்னைக்கு உன்னைக் கேட்டுதான் சமைக்குறேன்.மிச்சமாச்சுன்னா என்னால நாய்'க்கு எல்லாம் துக்கிப்போட முடியாது.எல்லாத்தையும் நீதான் சாப்பிட்டு தொலைக்கணும் !

4 )உங்களுக்கு எத்தனை ஃபிரண்ட்ஸ் இருக்காங்க ?

இந்த கேள்விக்கு அர்த்தம் என்ன தெரியுமா ?

உங்க பிரண்ட்ஸுங்கன்னு சொல்லி ஒருத்தன் கூட வீட்டுக்கு வரக்கூடாது.உனக்கு வடிச்சுக் கொட்டுறதே தண்டம்.இதுல அவனுங்களுக்கு வேற என்னால் வடிச்சு கொட்ட முடியாது !

5)என்னமோ பண்ணுங்கன்னு சொல்லுவாங்க சிலநேரம் !

பரவாயில்லை நம்ம சாய்ஸுக்கு விட்டுட்டாளே ன்னு நீங்க யோசிச்சீங்கன்னா உங்களை விட இளிச்சவாயன் இந்த உலகத்துலேயே இருக்க முடியாது.

நீயெல்லாம் திருந்தவே மாட்டே.எனக்கு இது பிடிக்கலை.இதுக்கு மீறி எதாவது செஞ்சேன்னா மவனே தொலைச்சு கட்டிடுவேன் !

6)எல்லாத்தையும் நான் பொறுப்பா பார்த்துக்குறேன்ன்னு சொன்னா !

இந்த வார்த்தைய சொன்ன உடனே உங்களுக்கு உச்சி குளிர்ந்திடுமே.அப்படியெல்லாம் சின்னப்புள்ளத்தனமா யோசிக்கக்கூடாது.இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் தெரியுமா?

எப்ப பார்த்தாலும் தண்டத்துக்கு ஊர் சுத்திகிட்டு இருக்குறதே உனக்கு பொழப்பா இருக்கு.இதுல குடும்பத்தை எங்கே கவனிச்சுக்க போறே?மொதல்ல சம்பளக்கவரை என் கையில கொடு !

7)நம்ம பையன் ஸ்கூல்'ல பேரண்ட்ஸ் மீட்டிங் இருக்காம் !

அக்கறையா நம்ம கூப்பிடுறாங்கன்னு நீங்க தப்பா திங்க் பண்ண கூடாது.இந்த வார்த்தக்கு என்ன அர்த்தம் தெரியுமா?

உன் புள்ளையோட லட்சணத்தை நீயும் தெரிஞ்சுக்க வேணாம்.ஸ்கூல்ல மிஸ்’கிட்ட நான் மட்டும் திட்டு வாங்கினா போதுமா?.நீயும் ஒரு நாள் வந்து வாங்கிப்பாரு.அப்பத் தெரியும்.

8)இந்த ஃபோன்'ல சரியாவே சிக்னலே கிடைக்கமாட்டேங்குது !


இந்த வார்த்தையை சொன்ன உடனே ஏதாவது நெட் வொர்க் பிராப்ளமா இருக்கும்ன்னு நீங்க சொல்லுவீங்க.ஆனா அவங்க என்ன சொல்ல வர்றாங்க தெரியுமா ?

நட்டு கழண்டவனே! நீ மட்டும் ஸ்டைலா ஃபோன் வாங்கி வெச்சிருக்கே.எனக்கு மட்டும் செகண்ட் ஹாண்ட்'ல அதுவும் இத்துப்போன மொபைல் வாங்கிக் கொடுத்திருக்கே.மொதல்ல இதை மாத்திட்டு Iphone வாங்கிக்கொடு !

9)இந்த நகைபோட்டா கழுத்துல ஒரே அரிப்பா இருக்குன்னு சொன்னா !


அப்படின்னா உடனே கழட்டி வெச்சிடுன்னு நீங்க சொல்லக்கூடாது !

கவரிங்'ல வாங்கிக்கொடுத்தா இப்படித்தான் இருக்கும்.நகை வாங்கிக்கொடுத்து எத்தனை வருஷம் ஆச்சு? மொதல்ல ஒரு நகைக்கடைக்கு கூட்டிட்டு போய் 916 ஹால்மார்க் நகையா வாங்கிக்கொடு !

10)எவ்ளோ வேலைதாங்க நீங்க செய்யுவீங்க ?

உடனே நம்ம மேல எவ்ளோ பரிதாபப்படுறாங்க'ன்னு நீங்களா ஒரு செண்டிமெண்ட் உருவாக்கிக்காதீங்க.

அட அறிவுகெட்டவனே...உன் வேலையுண்டு வீடு உண்டுன்னு வந்து சேர வேண்டியதுதானே.கண்டவன் பிரச்சனையில எல்லாம் நீ ஏன் தலையிட்டு ஓவரா சீன் போடுற...அப்படிங்கிறதைத்தான் அவங்க சொல்லாம சொல்றாங்க.

11)ஏங்க! இந்த சத்யம் தியேட்டர் எங்கே இருக்கு?

நீ மட்டும் உன் ஃபிரண்ட்ஸுங்களோட போய் கண்ட படத்தையும் பார்த்திட்டு வந்திடுறே.என்னை எப்பாச்சும் அந்த தியேட்டருக்கு எல்லாம் கூட்டிட்டு போயிருக்கியா...

அப்படின்னு உங்களை கேட்கறதுக்கு பதிலாத்தான் இந்தக் கேள்வியை அவங்க கேட்குறாங்க.

நண்பர்களே... இந்த அர்த்தத்தை எல்லாம் மனப்பாடம் பண்ணி வெச்சுக்குக்குங்க. ஒருவேளை உங்க மனைவியோ இல்லை காதலியோ இந்த மாதிரி கேள்வியை உங்ககிட்ட கேட்டாங்கன்னா அதுக்கு என்ன அர்த்தம் ன்னு தெரியாம நீங்க முழிக்க கூடாது இல்லை.அதுக்குத்தான் சொன்னேன்...!

நான் ஒண்ணுமே சொல்லலங்கோ.உங்க எல்லாருக்கும் சொல்லச் சொல்லி ஒரு நியூஸ் வந்திருக்கு.சொல்லிட்டேன் ஆளை விடுங்க !

எதிர்ப்பதிவு இங்கே...

Saturday, July 17, 2010

சுப்பு தாத்தாவைப் பாராட்டுவோம்.

டத்துக்குக் கவிதை எழுதிய அத்தனை கவிஞர்களுக்கும் நன்றியும் பாராட்டுக்களும். ஒன்றைவிட ஒன்று மிஞ்சியதான கவிதைகள்.ஆரம்பித்து ஓடி வந்த கார்த்திக்(LK),உலவு.கொம் கவிதைகள் வரும்போதே சந்தோஷப்பட்டேன்.அதன் பின் ஒருவர் பின் ஒருவராய் அசத்திவிட்டார்கள்.நேசனிடம் அவர் கவிதைக்குக் கருத்தைக் கேட்டு வாங்கிக்கொண்டேன்.ஒற்றை வரிக் கவிதைகள் கூட ஒன்றைச் சொன்னது.எழுதவே தெரியாது என்றவர்கள் கூட எழுதியிருக்கிறார்கள்.கும்மி மன்னர்கள் கவிதையும்தான் !ஓரிருவர் மட்டும் எழுதியவர்களுக்கு வாழ்த்தோடு போய்விட்டார்கள்.எழுதிய அத்தனை என் அன்பு நண்பர்களுக்கு மீண்டுமாய் நன்றியும் வாழ்த்தும்.

இதில் எனக்கு அதிசயமாய் இருந்தது என்னவென்றால் புது வரவான சுப்பு தாத்தா படத்துக்கான கவிதை எழுதி,அதைப் "பாடி யூ ட்யூப்" லும் இணைத்திருக்கிறார்.

இது இந்தப் பதிவுக்கான வெற்றியும்,தாத்தாவின் ஆசீர்வாதமுமாய் சந்தோஷப்படுகிறேன். அதனால் புதுவரவான் சுப்பு தாத்தா வை எல்லோரும் பாராட்டுவோம் வாங்களேன்.

ஹேமா(சுவிஸ்)

Monday, July 12, 2010

கவிதை எழுதலாம் வாங்கோ.

நிறைய நாளாச்சு கவிதை சொல்லி விளையாடி...
வாங்கோ வாங்கோ.எழுதலாம் !
இந்தப் படம் ஏதோ சொல்லுதுதானே...சொல்லுங்கோ !



விரும்பினா....உங்க கவிதைகளை உங்க தளங்களில் போட்டுக்கோங்க.

[LK]கார்த்திக்
*******************
ஆட்டுவிப்பவரே
இன்று
ஆட்டுவிக்கப்படுகிறார்?
நேற்றைய செய்கையின்
இன்றைய பலனோ இது ??

உலவு.காம்
******************
மக்கள் ஓட்டுபோட்டு
வளர்த்த கொரங்கு
அதிகாரத்த கையில
வச்சிக்கிட்டு மக்களையே
தண்டிக்குது !

(கொரங்கு = அரசியல்வா(ந்)தி.

டம்பி மேவீ
**************

செங்கோல் கை மாறினால்
குரங்கு ராஜா ஆகிவிடுமா ....

தமிழ் மதுரம்
***************
1)
மனிதர்களின்
குரல் வளைகள் நசுக்கப்பட்ட தேசத்தில்
நீதி வேண்டி இப்போது
குரங்குகளும் புறப்பட்டு விட்டன!

2)மனிதர்களிடன் செங்கோல் இருந்து
பயனேதும் இல்லை என்பதால்
இப்போது குரங்கிடன் போய் விட்டது!

ருத்ர வீணை
***************
மனசாட்சியின்
உண்மை உருவம்
கையில் ஒரு கொம்பு
கண்டிப்பாக தண்டனை.

நட்புடன் ஜமால்
*******************
1)
வளர்த்த கடா...!

2)பயிற்றுவிக்கும் பயிர்ச்சியில் ...!

நண்டு @நொரண்டு -ஈரோடு
*********************************

ம் ம் ...
ம் ம் ம் ...
ம் ...

தமிழ் உதயம்
*******************
யானைக்கொரு
காலம் வந்தா ....
குரங்குக்கொரு
காலம் வராதோ....

1)நசரேயன்
*****************
புறவிசை தாக்கும்வரை ஓடுகின்ற ஒன்று
ஓடிக்கொண்டே இருக்கும்.
நிற்கின்ற ஒன்று நின்றுகொண்டே இருக்கும்.
இதுதான் நியூட்டன் கண்டறிந்த நிலைமம்.

குச்சி எடுத்தா தாக்குதல் தாங்காம
ஓடிகொண்டே இருக்கும்
துரத்துவது துரத்திகொண்டே இருக்கும்
இதுதான் ஹேமா கண்டறிந்த நிலைமம்.

என் தாக்கமும் இது வழியே...
எவரிடமும் வாதிட முடியாத...
சொல்லிப் பகிர முடியா பின்னிக் குமையும்
எண்ணச் சிக்கல்களை எளிமையாக
என் எண்ண நடையில்
சேர்த்துக் கோர்த்திருக்கிறேன்
என் மன ஆறுதலுக்காக

என் ஓட்டமும் இது வழியே
எவரிடமும் அடி வாங்க முடியாத
சொல்லிப் பகிர முடியா கும்மி குமைக்கும்
பிரம்படி சிக்கல்களை எளிமையாக
என் அடி நடையிலே
சேர்த்து கொடுக்கிறேன்
உங்க மன ஆறுதலுக்காக.

2)ஹேமா கடைப்பக்கம் போவியா ..போவியா
இனிமேல போன
அடி பிச்சுடுவேன்...!

கே.ஆர்.பி.செந்தில்
**************************
சிங்கள சிறுபான்மை
குரங்கினது கையில்
பெரும்பான்மை ஆளும்
இந்திய
அதிகாரம் கொடுத்த
கோல் அது
ஆட்டுவிக்கதான்
செய்யும்...

முள்வேலி முகாமிற்குள்
முடக்கிவைத்த இனம்
முப்பது ஆண்டுகளாய்
எதிரிகளை புற
முதுகோட வைத்தததை
மறந்து விட்ட உலகம்

படம் காட்டி
அடிமைப் பட்ட
தமிழகத் தமிழனாய்
பிணம் காட்டி
பணிய வைக்க முயற்சிக்கும்
உலகு..

காலம் அந்தக் கூட்டமதை
நாம் தரும்
உணவிற்காய் வீதிகளில்
நிறுத்தும்..

வாழ்வே மரணத்திற்கான
பயணம்தான் !

-இரவீ -
*****************

1)உன்னால எனக்கு சோறு,
என்னால உனக்கு சோறு,
யாருக்கு தெரியும்
எனக்கு உன் மனமும்,
உனக்கு என் மனமுமென்று .

2)உனக்கு போட்டேன் கரணம்
உம்மட இடத்தில்.
இப்ப போடு தோப்புகரணம்
உப்புமடசந்தியில்.

3)தமிழே என்னை என்ன பாடு படுத்தினாய்
இப்போ நீ என்னிடம்.
(என் எழுத்தை திட்டின
அனைத்து நல்லுள்ளங்களுக்கும் இதை சமர்பிக்கிறேன்).
- இரவி-

4)குச்சியையும் கொடுத்து
கூத்தாட சொல்கிறாயே,
வருடங்களோடு வளர்ந்துவிட்டதோ
உந்தன் நம்பிக்கை.

அதிகாரம் கைபிடிக்க
கால் ஒருதிசை
தலை ஒருதிசையாய் ... நான்.
விட்டுவிடு ....
என்னை அப்படியே இருக்கவிடு !

ராஜவம்சம்
*******************
கட்சி விட்டு கட்சி தாவும் அரசியல்வாதியை விட,
மரம் விட்டு மரம் தாவும் நாங்கள் மேல்.

ஒழுக்கம் கெட்ட மனிதனை விட
ஐந்தறிவு குரங்காய்ப்பிறந்தது மேல்.

காதலிலும் ஜாதிப்பார்த்து
கலவியிலும் வர்ணம் பார்க்கும்
உங்கள் இனத்தைவிட
எங்கள் இனம் மேல்.

ஏற்றத்தாழ்வு எங்களுக்கில்லை
உயர்ந்தோர் தாழ்ந்தோர் யாரும் இல்லை.

சுதந்திரமாய் வாழ்வதால்,
சுதந்திரம் வேண்டி அழுததில்ல.

ஒழுக்கம் கெட்ட மனிதனை விட
ஐந்தறிவு குரங்காய்ப்பிறந்தது மேல்.

சி. கருணாகரசு
********************
பரிணாமத்தின் வளர்ச்சி கேள்விக்குறி!
பயமில்லா புரட்சியிடம் வெற்றிக்கொடி!!

நேசமித்ரன்
*******************

நேற்றின் பிரம்புக்கு
ஆடிகொண்டிருக்கிறது
இன்றின் பெண்டுலம்.

சிறுமுள் நகர்வு
தீர்மானிக்கும் நாளையை.

திசைகளைக் கூட்டி விடியும்
ஒரு பகலில் கூவும் பறவையின் அலகில்
வெட்சிப்பூ பூத்திருக்கும் !

[நேற்றைய வாழ்வின் நினைவுகளில் தான் இன்றைய நாளின் கடிகாரம் நகர்கிறது.அதாவது ஈழம் - இந்தப் படத்தில் மனிதனின் நேற்று குரங்கு - சிறு முள் சுருங்கிய போராட்டம்-படத்தில் சிறுவடிவம் 5 அறிவு- நாளை வெல்வோம் திசைகளைப்போல் பிரிந்திருக்கும் தமிழர் ஒன்று சேர்ந்து.வெட்சிப் பூ போரில் வென்ற பிறகு சூடும் மலர்.]

ஹேமா
**************

நானாகியிருந்து வந்த நீ...
எனக்கிருக்கும் அறிவின் ஒரு ....!

சாதியென்கிறாய்
மதமென்கிறாய்
வாளெடுக்கிறாய்
இரத்தம் குடிக்கும்
அட்டையாகிறாய்
பிறகு நானே
சாமி என்கிறாய்
மஞ்சள் துணி போர்த்தியபடியே
அரசியலும் பேசுகிறாய்
பிணங்கள் மலிந்த ஈழத்தில்
புத்தனாய்
மிளகு கொண்டு வா
பிறகு பார்க்கலாம் என்கிறாய்
சீ...த்தூ துப்பினாலும்
அழகாய் துடைத்துவிட்டு
மனிதமும் மண்ணாங்கட்டியும்
ஒன்றென்கிறாய்.
மல்லாந்து படுத்தபடி
பொய்க்கு மாரடிக்கிறாய்.

போ...போ
புத்தி பேதலித்த பொய்யனே
உபதேசிக்க
அப்பனுக்கு மந்திரம் சொன்ன
முருகன் வரான்.

மீண்டுமொருமுறை ஆரம்பமெடு
என் உருவில்!!!

மதுமிதா
**************
ஆசிரியரே
நீங்களும்
இந்தக் கோல்
மாதிரிதான்.
உங்கள்
உந்துதலால்
உயரம்
தொடுவேன்.
நன்றி
ஆசானே.

ஜெய்லானி
******************
எத்தனை முறை
என்னை ஆட்டி வைத்திருப்பாய்
நீயும் போட்டு பார்
ஒரு முறை
குட்டிக்கரனம்
வாழ்வின் வலி
தெரியும்.

அண்ணாமலை
************************

கண்ணாடியில்
தெரிகிறது..
இருவரின்
எதிர்காலமும்!

சுப்பு தாத்தா
*******************
நானும் ஆடறேன். நீயும் ஆடறே !!
ஆடுவதுனக்குத் தெரியாது. நீ

ஆடிய ஆட்டம் கூடிய கூட்டம்
எங்கே என்னும் தெரியாது.

பாடிய சந்தமும் ஓடிய பந்தமும்
நாடியே திரும்பவும் வாராதோ !

வாடிய உறவும் வாசமும் கொண்டு
தேடியே என்னை வாராதோ !

அறியாயோ நீ ! ஆண்டவனருகில் !!
நெறிகள் யாவும் மறந்தனையோ !!

அமரும் அரியணை அசையும் ஒரு நாள்
தமரும் தொலைந்தே போய்விடுவார்.


அருமை எனவே வாங்கிய யாவும்
அங்கங்கே தான் நின்று விடும்.
எருமைவாகனன் அழையும்போதுன்
உருவும் உடனே மறைந்துவிடும்.

கருமம் ஒன்றே துணை நிற்கும் அந்த‌
தருமக் குரலினைக் கேட்டிடுவாய்.

[பின் குறிப்பு: இன்னும் சற்று நேரத்தில் இது என்னுடைய
வலைப்பதிவில் கேட்கலாம். காணலாம்.
http://vazhvuneri.blogspot.com]

கலா
*********

பார்வையற்றுப் பரிதவிக்கின்றாயா?

கண்டும் காணாமல் போக
என்
மனவளம் இன்னும் குன்றவில்லை
குள்ளமென்று பயப்படாதே
என்
உள்ளம் உயரம்

எனக்குப்
பாரமென்று நினைக்காமல்
நீட்டுகிறேன் பற்றிக்கொள்
உன்னை
வழி நடத்தி விழியாய்
நானிருப்பேன் வா

உன் மனதுக்கு
என்னை உவமை சொல்லும்
மனிதனிடம்...
மனிதம்
இனிமேலும் என்னைக் குறைத்து
மதிப்பிடும் வழக்கத்தை
மாற்றட்டும்

உனக்கு நான் எனக்கு நீ
வித்தை காட்டி
விதியை வென்று
வீறு நடைபோட
எழுந்து வா என்
அன்புத் தோழா!!

அக்பர்
**********

ஆட்டுவிப்பவர்

நெறி தவறின்

ஆடுபவர் ஆட்டுவிப்பர்.

அம்பிகா
***************

நேற்று நான்;
இன்று நீ ....
அட்ரா ராமா..., அட்ரா ராமா...,

ராஜ நடராஜன்
*******************

இந்த ஆட்டத்துக்கு நான் வரல!

ஜோதிஜி
*************
இந்த ஆட்டத்துக்கு நான் வரல!

பொன்சிவா
*****************

'மனசாட்சி உறங்கும் வேளையிலேதான்
மனக்குரங்கு ஊர் சுற்ற புறப்பட்டுவிடும் ' -- கலைஞர் கருணாநிதி

என் மனக்குரங்கு ஊர் சுற்ற புறப்படுகையிலே
நிஜக்குரங்கு குச்சி கட்டி மறைத்தால் ..
என்ன செய்ய நான்...?

அஹமது இர்ஷாத்
****************************

நேற்று நான்,

இன்று நீ,

நாளை...?

குடந்தை அன்புமணி
*************************

மானாட மயிலாட
எல்லாம் வந்தாச்சு...
இங்கே-
குரங்காட்டத்திற்கு
மதிப்பில்லாமல் போயாச்சு...
நீயும் நானும்
வேறெங்கே போவது
வேறுவழி தெரியாமல்
நம் வயிறு நோவுது...!

ஜெயா
************
நேற்றைய நான்
இன்றைய நீ
நாளைய யார்????

ஸ்ரீராம்.
***************

1)நடக்காத நாடகத்துக்கு
இருவருமே
பார்வையாளராக இருந்தால்...
ஒரு
மாறுதலுக்கு
நீ
ஆடு...
குச்சி என் கையில் !

2)"ஆட்றா ராமா"
சொல்வதை நிறுத்தி விட்டு
யோசனையில் ஆழ்ந்த மனிதனிடம்
குரங்கும் ஆட்டத்தை நிறுத்தி விட்டு
காரணம் கேட்டது...

கவலைகள் சூழ்ந்த
மனிதன் சொன்னான்
"மறுபடி பழைய பரிணாமத்தை
அடைய வழியுண்டா
என்று யோசிக்கிறேன்..."

வேலு.G
*************
காலம் ஆடும் விளையாட்டு
மனிதன் குரங்கானபின்
குரங்கு மனிதனாகிறது !

ரியாஸ்
************
எதை எழுதலாம்
என்ற நினைப்பிலேயே
நேரம் கடந்துவிட்டது
எதைத்தான்
சொல்வேனோ
இந்த மனிதனை
இந்த குரங்கினை
நோக்கி...

கார்த்திக் சிதம்பரம்
*************************
குரங்குகள் தேசத்தில்
அரங்குகள் நிறைத்து மனிதர்கள்
இருந்தாலும்
இது தான்
கதி
தனியாய் மாட்டிகொண்டால்
சொல்லவே வேண்டாம்!

Tuesday, July 06, 2010

உலக அதிசயமான சியஸ் தேவனும் கிருஷ்ணனும்.

The statue of Zeus at Olympia was much admired by people who came to watch the Olympic Games. The statue was one of the Seven Wonders of the Ancient World.

சூடு
பிடித்திருக்கும் உலகக் கால் பந்தாட்டச் சமயத்தில் ஒரு தேடல்ப் பதிவு.

ஒலிம்பிக்குடன் மிக நெருங்கிய தொடர்பு கொண்டதுதான் "சியஸ்" சிற்பச் சிலை.ஏன் ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கியதே சியஸ் தேவனின் திருவிழாவுக்காகத்தான் என்கிறார்கள்.

ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கிய ஒலிம்பியா நகரிலேயேதான் இச்சிலையும் இருந்தது.தமிழர்களுக்கென்று தனியான நாட்காட்டி தேவையென்பதற்காகத் திருவள்ளுவர் ஆண்டு உண்டாக்கப்பட்டதுபோல கிரேக்கர்களுக்கும் ஒரு நாட்காட்டி உண்டாம்.இது ஒலிம்பிக் உருவானதாய்க் கருதப்படும் கி.மு 776 ல்தான் தொடங்குகிறதாம்.
அப்போதிருந்தே ஒலிம்பியா நகரில் சியஸ் தேவன் அதாவது தேவர்களுக்கெல்லாம் அரசன்(நம் ஊர் இதிகாசப்படி தேவேந்திரன்போல)வழிபாடு இருந்திருக்கிறது.சியஸ் தேவனின் கதை இந்திய இதிகாசத்தின் கிருஷ்ணன் கதையுடன் ஒத்திருக்கிறது என்பது இன்னொரு ஆச்சர்யம்.

இந்திய இதிகாசமான மகாபாரதத்தில் கிருஷ்ண அவதாரம் மனித உருவாக கம்சனை அழித்து அவனது கொடுமையிலிருந்து மக்களைக் காப்பாற்றினான் என்கிறது.இந்தக் கதையும் அப்படித்தான்.ஆனால் சியஸ் ன் வில்லன் அவன் தந்தையேதான்.தனது வழித் தோன்றலே தனக்கு அழிவு என்பதை முன்னமே தெரிந்துகொண்ட சியஸ் ன் தந்தை அடுத்தடுத்த சிசுக்களை விழுங்கி விடுவாராம்.இவரிடமிருந்து தனது குழந்தைகள் எதையும் காக்க இயலாத தாய் கிருஷ்ணனின் தாய் தேவகியைப் போலவே குழந்தை சியஸை இடம் மாற்றிவிடுகிறாள்.

இதனால் தந்தை அறியாமல் வெளியில் வளரும் பின்னால் மாவீரனாகி ஒரு கட்டத்தில் தந்தையுடன் மல்லுக்கு நின்று ஓங்கித் தந்தையின் வயிற்றில் உதைப்பதாகக் கதை சொல்கிறது.அப்போது அதுவரை தந்தை விழுங்கியிருந்த சியஸுக்கு மூத்தவர்கள் அனைவரும் வெளியேறி சியஸை வாழ்த்துகின்றனராம்.தந்தை மரணமடைகிறார்.தங்களுக்குச் சாபவிமோசனம் தந்த சியஸை அனைவரும் தங்கள் அரசனாக ஏற்றுக்கொள்ள சியஸ் தேவர்களுக்கெல்லாம் அரசனாக தேவேந்திரன் உருவாகிறான்.நம் தேவேந்திரன் போலவே சியஸுக்கு நிறைய மனைவிகள் குழந்தைகள் எனப் போகிறது அந்தக் கிரேக்கக் கதை.மொத்தத்தில் கிரேக்க சரித்திரத்தில் ஒரு கிருஷ்ணன் போன்றது சியஸ் வரலாறு.

சியஸ் தேவனின் சிலை இப்படித்தான் என்று சொல்ல அதைக் கண்டவர்கள் யாருமில்லை என்றாலும் அக்காலத்து நாணயங்களில் பொறிக்கப்பட்ட உருவத்தை வைத்தே சியஸ் தேவன் சிலை ஒலிம்பிக் விளையாட்டுக்களுடன் தொடர்புள்ளது என்பது பின்நாளில் அதாவது கி.பி 1829 ல் பிரெஞ்சுத் தேசத்தினர் தேவன் வாழ்ந்த இடத்தைத் தோண்டியிருக்கிறார்கள்.அப்போது கிடைத்த பழம்பொருட்களை பாரிஸ் நகரத்து பொருட்காட்சிச் சாலையில் இன்றும் காணலாம்.

1950 ல் இன்னொருமுறை அகழ்வாராய்ச்சி செய்தபோது தேவன் சிலையை உருவாக்க கோயிலிக்கு அருகில் ஃபிடியாஸ் உருவாக்கியிருந்த கொல்லர் கூடம் இனம் காணப்பட்டுள்ளது.ஆனால் அதன்மீது கிறிஸ்தவ தேவாலயம் ஒன்றும் இருந்திருக்கிறதாம்.

கிட்டத்தட்ட 22 அடி அகலமும் 40 அடி உயரமும் கொண்டதாம் இந்தச் சியஸ் சிலை.மரத்தாலான அடிப்படை ஃபிரேம்களை உருவாக்கி அதன்மீது உலோகத் தகடுகள் கொண்டு இந்தச் சிலையை அமைத்திருக்கிறார் ஃபிடியாஸ்.உலகப் புகழ் பெற்ற வண்ண ஓவியமான "மைகேல் ஆஞ்சலோ"வின் படங்களை மாதிரியாகக் கொண்டு அதன் உருவால் சிலை வடிக்கவேண்டும் என்பதுதான் ஃபிடியாஸுக்கு இடப்பட்ட கட்டளை எனத் தெரிகிறது.

olympia-zeus-temple.The Temple of Zeus at Olympia. One of the Seven Wonders of the ancient world. Destroyed by the order of a Christian emperor of the Roman Empire, Theodosius II in 426.

அந்த வடிவில் அப்போதைய நாகரீகத்தின்படி தாடியையும் சேர்த்துக்கொண்டு சியஸ் தேவனைக் கற்பனை செய்து பார்த்திருக்கிறார்.ஃபிடியாஸ் உலோகத் தகடுகளால் உருவம் கொடுத்தாலும் தங்கத்தாலும் தந்தத்தாலும் இழைத்து இறுதி வடிவம் உருவாகியுள்ளது.தேவர்களுக்கெல்லாம் அரசன் எனபதால் கம்பீரமான சிம்மாசனம் ஒன்றை உருவாக்கி அதன்மீது அமர்ந்திருப்பதுபோல சிலை உருவானது.சிலையின் வலது கையில் கிரேக்க வெற்றித் தேவதையான "நைக்"கின் வெற்றிச் சின்னம் இருந்துள்ளது.

வழிபாட்டுத் தேவனாக நீண்ட காலம் இருந்தாலும் கிறிஸ்தவ மதம் உருவாகி அது உலகம் முழுதும் பரவியபோது சியஸ் தேவனுக்குச் சிக்கல் ஏற்பட்டிருக்கிறது.கி.பி 255 ல் ரோம் நாட்டு கிறிஸ்தவ அரசனான முதலாம் தியோடஸஸ் சியஸ் வழிபாடு தனது மதம் பரவத் தடையாக இருப்பதாக எண்ணி ஒலிப்பிக் விளையாட்டுக்கும் சேர்த்தே தடை விதித்தான்.இதனால் தியோடஸ் அரசனை எதிர்க்க முடியாத சியஸ் வழிபாட்டு மக்கள் தங்கள் தேவனைக் காக்க முயன்றனர்.இதனால் அப்போது கான்ஸ்டான்டி நோபுள் என்ற நகரத்திற்கு தற்போதைய துருக்கி நாட்டின் இஸ்தான்புல் சியஸ்தேவன் சிலையை இடம் பெயர்த்தனர்.

20 அடி அகலமும் 3 அடி உயரமும் கொண்ட அடித்தளத்துடன் எல்லை தாண்டிய சியஸ் தேவன் அங்கிருந்து தனது "தேவ ஆட்சி"யைத் தொடர்ந்தாலும் அது நீண்ட காலத்திற்கு நிலைக்கவில்லை.கி.பி 462 ல் இந்தச் சிலை தீக்குள் இரையாகி எரிந்துள்ளது.தந்தத்தால் இழைக்கப்பட்டதாலோ என்னவோ அதிகமாக உருகி தகடாய் ஓடி.....சியஸ் தேவன் உரு மாறிப்போனான்.

பின்நாளில் லிபியாவின் சைரினில் சியஸ்தேவன் சிலை போன்ற மாதிரி உருவகங்கள் சின்ன அளவில் செய்யப்பட்டன.என்றாலும் பிரமாண்டத்திற்காகப் பெயர் பெற்ற பெரும் சிலைதான் உலக அதிசயமாகப் போற்றப்பட்டு வருகிறது.

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP