Tuesday, November 30, 2010

என்னைப்போல யாராவது இருந்தால் !

என்னை நான் வெறுத்துத் தள்ளி நிற்கும் சமயத்தில் மனம் சோர்ந்து எதிலும் இல்லாமல் விரக்தி தோழமைக் கை கொடுக்க சாப்பாடு நித்திரை தவிர்த்து எதிலும் மனம் ஒட்டாமல் குந்திவிடுவேன்.ஆனால் ஏதோ ஒரு இசை மாத்திரம் என்னைத் தனிமையாக்காமல் சூழ்ந்து நிற்கும்.

ஆழ யோசித்தால் .... நான் ஏன் இப்படி.இன்பமும்,துன்பமும்,இழப்புக்களும் எனக்கு மட்டும்தானா.என்னைவிட இயலாதவர்கள்...இழப்பையே வாழ்வாக வாழும் எத்தனை பேர் உலகில்.

இந்த உலகில் நான் பிறந்துவிட்டேன்.நான்தான் இந்த வாழ்வை வாழ்ந்து முடிக்க வேண்டும்.என்னைப்போல யாரும் இல்லை.என் வாழ்க்கையை யாரும் வாழமுடியாது.விரும்பியோ விரும்பாமலோ பிறந்த வாழ்வை வாழ்ந்தே ஆகவேண்டியிருக்கிறது.

வாழ்வு தளம்புவதும்,உறவுகள் பிரிவதும்,இல்லாமையும்,வறுமையும் இவற்றால் வரும் கஸ்டங்களும் இயல்பானதே.ஏன் பெரும்பணம் படத்தவர்களுக்கும்,உயர் பதவியில் இருப்பவர்கள் மட்டுமென்ன சந்தோஷமாகவா வாழ்வார்கள்.நான் மட்டும்தான் வேதனையோடும் விரக்தியோடும் வாழ்கிறேன் என்பது கொஞ்சம் என் அறிவீனத்தைச் சொல்லாமல் சொல்கிறது.இவையில்லாவிட்டால் வாழ்வின் சுவையும் குறைந்துவிடுமோ என்பதாயும் இருக்கிறது.

எத்தனையோ இழப்புக்கள் வேதனைகள் பிரிவுகளைத் தாங்கியபோதும் சில பிரிவுகள் சில இழப்புக்கள் மனதோடு கலந்துகிடப்பவை.காயங்கள் மாறினாலும் அவை வடுக்களாக அப்பப்போ கைகளுக்கு தட்டுப்பட்ட்டு ஞாபகங்களை கிளறிப் புதைத்து,எரித்து,பின் அணையாத தனலாகத் தகித்துக்கொண்டிருப்பவை.

இப்போதெல்லாம் இன்னும்...இன்னும் வலிகளை வேதனைகளைத் தாங்கக்கூடிய பக்குவத்தையடைய முயல்கிறேன்.என்னால் உணரமுடிகிறது.என் தலை நிறைந்த பாரங்களாய் என் வேதனைகள்தான்.சந்தோஷமான நேரங்களில் உடம்பின் உற்சாகம் கூடிநிற்பதும் கவலையான சமயங்களின் உடம்பின் சக்தியே குறைந்து கூடாய்க்கிடப்பதையும் உணர்கிறேன்.கவலைகள் மறக்கவும் வெறுக்கவும் தொடங்குகிறேன்.தூரவே இருக்கும்படியாகக் கட்டளையிடுகிறேன்.

இன்னும்...இன்னும் வாசிப்பதையும் கேட்பதையும் அதிகமாக்குகிறேன்.
தேவையான தேடுதலில் கவனம் செலுத்துகிறேன்.ஒருவேளை நான் கூடுதலாகப் பேசுகிறேனோ என்கூட நினைக்கிறேன்.அர்த்தமற்ற ஆசைகளுக்குள் அழுந்திக்கிடக்கிறேனோ.எல்லா வேதனைகளுக்கும் காரணம் நானேதானோ.ஒரு வரையறையின்றி பறந்து திரியாமல் எனக்கென்ற சில கட்டுப்பாடுகள், கோடுகள் போட்டு அதற்குள் என் எண்ணங்களை ஆசைகளை அடுக்கி வைத்திருக்கிறேனோ.

விரிந்து பரவிக் கிடக்கும் உலகில் நான் தனித்தில்லை.எனதென்று எதையும் சொந்தம் கொண்டாடுவதில் அர்த்தமேயில்லை.உலகம் தாண்டிப் போனால் பிரபஞ்சம்.அதையும் கடந்து போனால்...சிந்தனைகள் குறைந்ததாலேயே தாமதங்கள் வாழ்வில்.என் எண்ணங்கள் செயலற்றுக் கிடந்ததுக்கு நானேதான் பொறுப்பு.சிரிப்பைத் தொலத்ததற்கும் நானேதான் பொறுப்பு.

அன்பைக்கூட அளவோடு பெற்றும்...கொடுத்தம் இருந்திருக்கவேண்டும்.
இன்று ஜீரணிக்க முடியாமல் அவதிப்படுவது நான்தானே.சாப்பிடும் சாப்பாட்டுக்கு அளவும் கலோரியும் நினைக்கும் நான்...ஏன் உணர்வுகளுக்கு மாத்திரம் அளவை அதிகப்படுத்தி வைத்திருக்கிறேன்.

என்றுமே நான் அடுத்தவர்கள் புகழவேண்டும் என்பதற்காக வாழ்ந்ததில்லை.ஆனால் என் மனதிற்கு பிடித்தமான மாதிரி வாழ ஆசைப்பட்டிருக்கிறேன்.அதேசமயம் என்னால் அடுத்தவர்களுக்கு இடைஞ்சல் இல்லாமல் வாழவும், மனதுக்கு ஒப்பாத,மனச்சாட்சி தவறியும் வாழ நினைத்ததில்லை.

வாழ்வு அற்புதமாய் அழகாய் இருக்கிறது இப்போதெல்லாம்.
எண்ணிக்கையோடு வாழ்வதைவிட எண்ணிக் கை நிறையக் கொடுத்து உதவி வாழ்வதில் எத்தனை சந்தோஷம்.உயிர் இருப்பதாய் இருந்ததற்கும்....உயிர் வாழ்வதற்கும் நிறையவே வித்தியாசம்.

மாற்றமுடியாத நேற்றைய வாழ்வை மறக்கிறேன்.இன்றைய வாழ்வை ரசிக்கிறேன் மதிக்கிறேன்.நாளைய பொழுதை பிரயோசனமாய் திருத்தி திருப்தியாய் வாழ்வேன்.என் வாழ்வை நானே வாழ்ந்துகொள்வேன்.வாழ்வின் வலிகளை வசப்படுத்திக்கொள்வேன்.
இனி எதற்காகவும் யாருக்காகவும் நான் காத்திருக்கபோவதில்லை.

ஹேமா(சுவிஸ்)

Thursday, November 18, 2010

அவன் அவள் அவர்கள்.

த்மன் அலைபேசியோடு அப்படியே சாய்ந்திருந்தான் சுழல்நாற்காலியில்.மகன் ரிஷி கூப்பிடும் சத்தம் கேட்டே நிலைக்கு வந்தவனாய்..."என்னப்பா" என்றான்.

"ஜெனியை வீட்டுப்பாடம் செய்ய உதவி செய்யக் கேட்டேன்.தனக்கு நிறைய வேலை இருப்பதாய்ச் சொல்கிறாள்.நீங்களாவது சொல்லித் தாருங்கள்" என்று ஜேர்மன் மொழியில் கேட்டபடி நின்றிருந்தான் ரிஷி.

பத்மனுக்கு அவ்வளவாக சொல்லிக்கொடுக்கத் தெரியாது.சுவிஸ் வந்து 15 வருடமாகியும் மொழித் திறன் இல்லை.

"ஏன் இன்று அம்மாவிடம் கேட்டுக்கொள்ளவில்லை"... என்றபடி வாங்கிப் பார்த்தான் பத்மன்.

"சரி இரு...அக்காவிடம் சொல்லித் தரச்சொல்கிறேன்" என்று சொல்லிக்கொண்டே...

"ஜெனி ப்ளீஸ் மா தம்பிக்குச் சொல்லிக் கொடு.எனக்கு சொல்லிக் கொடுக்கத் தெரியவில்லை"... என்றான் தமிழ் பாதியும் ஜேர்மன் பாதியுமாய்.

அப்பா இறந்து 6 மாதங்களாகிறது.அம்மா தனித்துவிடப்பட்டதாய் தான் உணர்ந்தாலும் தன்பாட்டில் எனக்கும் பிள்ளைகளுக்கும் தனக்கு முடிந்ததைச் சமைத்துத் தந்துகொண்டிருந்தா.பிள்ளைகளும் என்றும் இங்கு தங்குபவர்கள் இல்லை.கிழமையில் செவ்வாய்,புதன் கிழமைகளில் மாத்திரமே.ஜெனி ஓரளவு எங்கள் சாப்பாடான சோறு,புட்டு, உறைப்புக்கறிகள் சாப்பிடுவாள்.ரிஷிக்கு வாழைப்பழரொட்டியும்,பால்புட்டும் பிடிக்கும்.அவனுக்காகவே அம்மா உழுந்து வறுத்து அரைத்து பால்புட்டு,அரிசிமாக்கழி என்று செய்து கொடுப்பா.இல்லாவிட்டால் மக்டோனால்ஸ்,பூஸ்ட் என்று ஏதாவது நான்தான் தெரிந்த சுவிஸ் உணவுவகைகளைச் செய்துகொடுப்பேன்.

இன்றும் அம்மா செய்யும் எங்கள் சமையலின் வாசனை கதவு தாண்டி வெளியில் போய்க்கொண்டிருந்தது.எங்களுக்கு வாசனை.வெளியில் சுவிஸ்காரருக்கு அது நாத்தமாகக் கூட இருக்கலாம்.

அப்பா அம்மா இரு தங்கைகளோடு 5 வருடங்களுக்கு முன் இங்கு அழைத்துக்கொண்டேன்.தம்பியைக் கனடா அனுப்பிவிட்டேன்.ஒரு தங்கையைச் சொந்தத்தில் திருமணம் செய்து கொடுத்தேன்.மறு தங்கை ஊரில் இருக்கும்போதே பிரான்ஸ்ல் இருக்கும் ஒரு பையனை விரும்பியிருந்தாள்.

வந்து ஒரு வருடத்திலேயே மூத்த தங்கையின் திருமணம்.சொந்தம் என்றபடியால் பெரிதாகச் செயவு இல்லை.அதோடு மாமா மாமி மச்சான் எல்லோருமே இங்கு வந்து திருமணம் செய்துகொண்டு கூட்டிப்போனார்கள் தங்கையை.எல்லாச் செலவும் தானே ஏற்றுக்கொண்டான் மச்சான் என் நிலை அறிந்தவனாய்.நான்கு பேரைக் களவாக இலங்கையிலிருந்து கூப்பிடுவது என்பது ஏஜென்சிக்குப் பெரிய தொகை செலவு.அவர்கள் வந்து அடுத்த வருடத்திலேயே பெரிய செலவு என்று சொல்லிக்கொண்டிருந்தாள் கிரட்.

அதே வருடத்தில் அப்பாவுக்கும் சிறிது சிறிதாக நோய் வந்தும் போயும் கொண்டிருந்தது.அதுவும் அடிக்கடி செலவுதான்.என்ன செய்யலாம்.வாழ்வின் அத்தியாவசியச் செலவுகளைக் கிரட்டும் செய்துகொண்டுதான் இருந்தாள்.

அவளின் அன்புக்கும் உதவிக்கும் ஈடு இல்லை.அவளால்தான் நான் இத்தனை உயர்ந்தேன்.சுவிஸ் வந்து 6 மாதங்கள் வேலை இல்லாமல் இருந்தேன்.அந்தச் சமயத்தில் உதவிப்பணம் தருவார்கள்.அது வாங்கப் போகும் வேளையில் அந்த அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருத்தியாகவே இந்த மார்கிரட்டைச் சந்தித்தேன்.என்னைப்பற்றி எங்கள் நாட்டின் அவலங்கள் பற்றி என் குடும்பம் பற்றி விசாரிக்கத் தொடங்கியவள் மெல்ல மெல்ல என்னை விரும்புவதாகச் சொன்னாள்.

ஓரளவு ஆங்கிலம் தெரிந்தபடியால் அவளோடு என் நிலைமைகளை எடுத்துச் சொல்லிக்கொண்டிருந்தேன்.என்னைப் பத்து...என்றே அழைத்து என் கை வருடி ஒரு தாயின் அன்போடு எனக்கு ஆறுதலாயிருந்தாள் கிரட்.

எங்கள் பழக்கவழக்கம்,பண்பாடு,கலாசாரம் எல்லாம் பற்றிக் கதை கதையாகச் சொன்னேன்.சமையல் பற்றிச் சொன்னேன்.அடம்பிடித்தாள் சமைத்துக் காட்டச்சொல்லி.சமைத்துச் சாப்பிட்டோம் இருவருமாக.புரிதல் நிறைவாகவே பட்டது எனக்கும்.எங்கள் பெண்கள் போலவே பண்பாடினாள்.ஒத்துக்கொண்டது ஒட்டிக்கொண்டது மனங்கள்.அறிவித்தோம் இருபக்கப் பெற்றவர்களுக்கும்.சட்டப்படி இணைந்துகொண்டோம்.

வாழ்வு வித்தியாசமாய் இனிதாய் அன்புத் துணையோடு நகர்ந்துகொண்டிருந்தது.எங்கள் சாப்பாடு தொடக்கம் இனிமையான பாடல்கள் வரை ரசிக்கப் பழகியிருந்தாள் கிரட்.பத்து...பத்து என்று என்னைப் பற்றிப் படர்ந்திருந்தாள் என் தோழியாக.

மூன்று வருடங்களின் பின் பிறந்தாள் ஜெனி.அதன்பின் ரிஷி.

அவளாகவே சொல்லிப் பணம் அனுப்புவாள் அப்பா அம்மாவுக்கு.ஓரளவு தமிழ் சொற்கள் கதைக்கப் பழகிக்கொண்டாள்.

அத்தை....சுகமா இருக்கீங்களா....உங்க மகன் ரொம்ப குழப்படி.என் பிள்ளைங்க நல்லம்.அவங்களும் சுகம்.

இப்படியாகச் சின்னச் சின்னதாக பேசப் பழகியிருந்தாள்."மலரே மௌனமா...மிகவும் பிடித்த பாடல்.எந்தப் பிடித்த பாடலுக்கும் பொருள் கேட்டுத் தெரிந்துகொள்வாள்.

இப்படியாய் இருந்த அவள்தான் இன்று இரண்டு பட்டுப் பிரிந்து நிற்கிறாள்.என்னைவிட அவளுக்குத்தான் வேதனை அதிகம்.

காரணம் அவர்களின் வாழ்க்கை பாரங்கள் சுமக்காமல் இலேசானது.என் வாழ்க்கை...என் பாதை என்று பெற்றவர்கள் கையில் இவர்களோ இவர்கள் கையில் பெற்றவர்கள் பிறந்தவர்களோ தங்கியிருப்பதில்லை.சிறு சிறு உதவிகள் சந்தோஷங்களோடு மட்டுமே இவர்களின் உறவு.அமைதியை விரும்புபவர்கள்.மன உளைச்சலைத் தவிர்ப்பவர்கள்.

ஆரம்ப காலத்தில் என் குடும்பத்தோடு மாதம் அனுப்பும் பணமும் தொலைபேசியோடு மட்டுமே இருந்த தொடர்பு என் குடும்பம் நாட்டின் சூழ்நிலையால் அவர்களையும் ஒரு அமைதியான வாழ்க்கைக்குக் கொண்டு வர நினைத்தே ...

அதற்கு அவளும் சம்மதித்தாள்.பணமும் உதவினாள்.

ஒருவேளை இப்படியாகும் என்று அவள் எதிர்பார்க்கவில்லைப் போலும்.

அப்பா அம்மா தங்கை ஹொங்ஹொங் போய் அங்கு 7 மாதங்கள் பிறகு எங்கெங்கெல்லாமோ அலைந்து அங்கங்கெல்லாம் தேடுதலும் தொலைபேசிச் செலவும்.ஒரு மாதிரி 11 மாதங்கள் அலைந்து வந்து சேர்ந்தார்கள்.மறுபக்கத்தில் தம்பி பயணித்தான் கனடா.அதன் செலவு.வீட்டிலும் இரு குழந்தைகளோடு இருவரும் வேலைக்குப்போவதும் குடும்பத்தைப் பராமரிப்பதுமான செலவுகள்.

இது என் தலையில் சுமக்கும் பாரமாயிருந்தாலும்...கிரட்டுக்கு இருக்கும் முழுச் சந்தோஷம் நானும் குழந்தைகளும் மட்டுமே.வாரம் ஒருநாள் ஞாயிறு மட்டுமாவது வெளியில் எங்காவது போய்வர வேண்டும்.விடுமுறைக் காலங்களில் இரண்டு வாரமாவது எங்காவது சுற்றுலாப் போகவேண்டும் என்பது நியதியும் ஆசையும்.

எனக்கு இருக்கும் மனநிலையில் என் சொந்தச் சந்தோஷங்களைத் தவிர்க்கத் தொடங்கினேன்.இங்கேதான் பிரச்சனையே தொடங்கியது.

"பத்து....எனக்குப் பிடிக்கவில்லை.நீ கடன் கடன் என்கிறதும்......எந்த நேரமும் உன் குடும்பம் பற்றி மட்டும் யோசிச்சுக் கொண்டிருக்கிறதும்...."

உண்மைதான் கடன் முட்டி வந்து நிற்கிறது.

அப்பா அம்மா வந்து 5 வருடத்திற்குள் நான் ஆலாய்ப் பறக்கத் தொடங்கிவிட்டேன்.என் குடும்பச் சந்தோஷங்களைத் தொலைத்துவிட்டேன்.கிரட் தள்ளியே உணரத் தொடங்கிவிட்டாள்.

அவளும் புரிந்துகொள்கிறாள்.ஆனாலும் முடியவில்லை.ஒரே சலசலப்பு வீட்டில்.

இரண்டாவது தங்கைக்கும் திருமணம் சீக்கிரத்தில் அதுவும் நிறைவான சீதனத்தோடு அப்படி இப்படியென்று செய்துகொடுத்தேன்.

மூத்த தங்கைக்குக் குழந்தை பிறந்திருக்கிறது.நான் மாமாவாம்.கண்டிப்பாய் முறைதலைகள் செய்யவேணுமாம்.கடமைகள் தொடர்ந்தபடி.

இதோடு புதுக்கதை...குழந்தை பிறந்ததிலிருந்து தங்கைக்கு மனநிலை சரியில்லையாம்....மச்சான் ஒருமாதிரிக் கதைக்கிறார்.என்ன ஆகுமோ என்றபடி !

என்னதான் ஒத்திழுத்தாலும் பொறுமையிழந்து பார்த்துக்கொண்டிருக்கிறாள் கிரட்.

அப்பாவின் நோய் வர வர கூடிகொண்டே போனது.வயோதிபத்தின் தன்மையால் அவருக்குக் கொடுக்கும் மருந்துகள் சிகிற்சைகள் பலன் ஏதும் தராமல் குறைவதும் கூடுவதுமாகவே இருக்கிறது.

இப்போ அதுவும் வேலையோடு வேலையாகிவிட்டது எனக்கு.கிரட்டுக்கு குடும்பப் பாரம் கூடியிருந்து.குழந்தைகளைக் கவனிக்கவோ பாடசாலையால் கூட்டி வரவோ ...ஏன் வீட்டு மளிகைச் சாமான்கள் வாங்குவது வரை எல்லாமே கிரட்தான் பார்த்துக்கொண்டாள்.எனக்கு வேலையும் வைத்தியசாலையுமே உறவாகிவிட்டிருந்தது.அம்மாவையும் அடிக்கடி கூட்டிப் போகவும் வேண்டியிருந்தது.

இந்கக் கால்கட்டத்தில்தான் கிரட் ஒருநாள்...

"பத்து....இனி என்னால் உன்னோடு வாழமுடியாது.ஆனால் இப்போதும் உன்னை விரும்புகிறேன்.நீ...இப்போவெல்லாம் என்னை மறந்தே போகிறாய்.இன்னும் வர வர உன் குடும்பத்தின் பாரமும் செலவுகளும் கூடிக்கொண்டே போகிறது.நானும் குறையும் என்றுதான் சமாளித்துக் கொண்டிருந்தேன்.உன் அப்பாவுக்குச் சுகமில்லை.உன் மூத்த மச்சான் வேறு திருமணம் செய்ய்ப்போவதாகச் சொல்கிறான்.அந்தத் தங்கையும் குழந்தையும் இன்னொரு பாரம் உனக்கு.அவர்கள் அங்கு இருந்தாலும் அதன் வேதனை பாரம் எல்லாமே நீதான் சுமக்கப் போகிறாய்.எனக்கு ஒரே நெஞ்செல்லாம் வலிக்குது.நீ யாரையும் அவர்கள் பாட்டுக்கு விடுவதாயில்லை.எல்லாவற்றையும் உனதாக்குகிறாய்.என்னால் இதைப் பார்த்துக்கொண்டிருக்கவோ இதற்குள் கிடந்து உளரவோ முடியவில்லை.மன அழுத்தம் அதிகமாகிறது எனக்கு.இப்படியே போனால் மனம் குழம்பிவிடும்போல இருக்கு.

ஆனால் உன்னை இந்த நிலையில் விட்டுப் போகவும் விருப்பமில்லை.இப்போதும் உன்னை விரும்புகிறேன்.ஆனால் எனக்கானவனாய் மட்டும் நீ முன்னைப்போல இல்லை.என்னாலும் பெரியதொரு குடும்பச் சிக்கலுக்குள் பின்னித் தவிக்க முடியவில்லை.எனவே நான் முடிவு செய்துவிட்டேன்.நான் உன்னை விட்டுப் பிரிந்திருக்கப்போகிறேன்.என்னால் இனி முடியாது.நான் இதை இன்று ஒரே இரவில எடுத்த முடிவல்ல.பல நாட்களாகச் சிந்தித்து என் பெற்றோருடனும் கலந்தே இப்படியொரு முடிவெடுத்திருக்கிறேன்."என்று தன் மனதில உள்ள அத்தனையும் கொட்டி முடித்தாள்.

என்னால் எதுவுமே சொல்ல முடியவில்லை.உண்மைதான்.என் குடும்பச் சிக்கல் இன்னும் கூடிக்கொண்டே போகிறதே தவிர குறைவதாயில்லை.

அவர்கள் வாழ்வில் இப்படியான விஷயங்களைச் சந்தித்தே இருக்க மாட்டார்கள்.பொருளாதாரம் நிறைவாக இல்லாவிட்டாலும் அவர்களுக்குத் தேவையானதை அவர்களது நிலைமைக்கேற்றபடி அரசாங்கம் கவனித்துக்கொள்ளும்.பாசம் இருந்தாலும் எதையும் பெரிதாக அலட்டிக்கொள்ளாத மனநிலை அவர்களுடையது.ஒருவருக்கு ஒருவர் பாரமாக இருக்கமாட்டார்கள்.பாரத்தை ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள்.நான் மௌனித்து ஏதோ ஒரு பேச்சுக்குச் சமாதானம் சொல்லிக்கொண்டு வேறு வழியற்று அவளை அணைத்தபடி ஊமையாய் இருந்தேன்.

"எனக்கு இதைவிட வேறு வழி தெரியவில்லை பத்து...அன்புக்குள் கட்டிக்கிடந்தபடியால்தான் இந்தப் பத்து வருடங்களை உன்னோடு என்னால் பகிர்ந்துகொள்ள முடிந்தது.இனியும் முடியாதுப்பா என்றாள்."கண்கள் கலங்குவதை மட்டும் அவளால் தடுக்க முடியவில்லை.அது அன்பின் ஊற்றெடுப்பு.

பிள்ளைகள் அங்கும் இங்குமாக பெற்றவர்களைப் பங்கெடுத்துக்கொண்டார்கள்.ஜெனிக்கு ஓரளவு புரிந்தும் புரியாத கணக்கானது அப்பா அம்மாவின் வாழ்வு.

ரிஷி மட்டும் அடிக்கடி கேட்டுக்கொள்வான்....
"ஏன் அம்மா தனியாக இருக்கிறா.நான் அம்மாவோடு கோபம்..."என்று மட்டும் சொல்லுவான்.ஆனால் அம்மாவோ அம்மா தந்த பொம்மையோ வேணும் தூங்குவதற்கு.

என்றாலும் நேரம் ஒதுக்கி நல்ல சிநேகிதர்களாய்ச் சந்திப்பதும்,பிள்ளைகளோடு உணவகம் போவது,சுற்றுலாப் போவது என்றும் தீர்மானித்திருந்தார்கள்.

இப்போ....அப்பாவும் அதே நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார்.

கிரட் வந்திருந்தாள்.மாமா..என்று உருகி மனம் விட்டு பாசத்தோடு அழுதாள்.அப்பா வாங்கிக் கொடுத்த சிரட்டையிலான ஒரு பொம்மையைத் தன் தலை மாட்டில் வைத்திருப்பதாகச் சொல்லிக் கொள்வாள்.ஆனால்....ஏன் ....!

இனி..அம்மா தங்கை குழந்தைகள் என்று அந்தப் பாரங்களைச் சுமந்தபடியே பத்மனின் வாழ்க்கை சுமைதாங்கியாய் ஒற்றை இடத்தில் நகராமால் அப்படியே.கிரட் என்கிற அன்பு இருக்கிறவரை அவன் அப்படியேதான் இருப்பான்.சாய்ந்துவிடவும் மாட்டான்.சாய்ந்துவிட விடவும் மாட்டாள் அவனது கிரட்.

ஹேமா(சுவிஸ்) படங்கள் உதவி - இணையம்.

Wednesday, November 10, 2010

உலவும் வீடு.

ப்படியும் ஒரு வீடு வாங்கினா என்ன ? வீடு திருத்தப்போய் ரொம்பவே உடம்பும் மனசும் இளைச்சுப்போய் இப்பிடி ஒரு பதிவு !































ஹேமா(சுவிஸ்)

  © Blogger templates kuzanthainila by kuzhanthainila 2008

Back to TOP